துபாயில் ஷாப்பிங் சென்றால் இனி நீங்கள் வெறும் கையை வீசி செல்லலாம்… புதிய நடைமுறை அறிமுகம்!

UAE:டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்டு வந்துள்ள மாற்றங்களில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் சேவை பண பரிமாற்று சேவையாகும். முன்பெல்லாம் வேற ஒரு அக்கவுண்டிற்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் பல மணி நேரங்களுக்கு முன்பாகவே வங்கிகளுக்கு சென்று டோக்கன் வாங்கி கால் கடுக்க நின்று, சலானை வாங்கிச் சென்று பணம் செலுத்தியதற்கான சான்றுக்காக பத்திரப்படுத்துவோம்.

அதற்கு அடுத்த கட்டமாக ஏடிஎம் கார்டு எனும் நடைமுறை வந்ததிலிருந்து தேவை ஒரு படி மேலே சென்றது. வெளியே எங்காவது செல்ல வேண்டுமென்றால், சில்லறைகளை சரியாக வைத்துக் கொண்டு ரூபாய் நோட்டுகள் தனியாக, சில்லறைகள் தனியாக என்ன பெரியவர்கள் எல்லாவற்றையும் சரியாக வைத்துக் கொண்டு கிளம்புவார். எப்பொழுது ஜி பே மற்றும் போன் பே போன்ற ஆப்புகள் வந்ததோ இவை எல்லாவற்றிற்கும் மொத்தமாக ஆப்பு வைத்தது.

தற்பொழுது வெளியே செல்ல வேண்டுமென்றால் கையில் செல்போன் ஒன்று இருந்தால் போதும். தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என நிலைமை மாறிவிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்டில் அதற்கும் ஒரு படி மேலே போய் உள்ளங்கையை காட்டினாலே பணம் பரிமாற்றம் நடக்கும் சேவையை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக இந்த சேவை நடைமுறைக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளுக்கு சென்றால் கார்டுகளை பயன்படுத்தி பேமெண்ட் செய்யும் முறைக்கு பதிலாக உள்ளங்கையை காட்டி பேமெண்ட் செய்யும் முறை நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு முயற்சியில் தற்பொழுது உள்ள தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இதன் மூலம் பொதுமக்களின் பயோமெட்ரிக் சேவைகள் வங்கிகள் மூலம் பெறப்படும். பொதுமக்கள் தங்களது வங்கி கணக்குகளுடன் பயோமெட்ரிக் சேவையை இணைத்தால் போதுமானது. பொதுமக்களின் கைரேகை உட்பட அனைத்து விவரங்களும் வங்கி உடன் இணைக்கப்படும். இதன் மூலம் கைரேகையை காண்பித்தாள் தொடர்புடைய அக்கவுண்டில் இருந்து பணம் வசூலிக்கப்படும்.

முதற்கட்டமாக துபாயில் உள்ள 50000 வணிக நிறுவனங்களுக்கு இந்த பேமெண்ட் ஆப் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.