7 வயது பிஞ்சு காருக்குள்ளே மாண்ட சம்பவம்… பெற்றோர்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளை விளக்கி கூறிய அரசு!

சார்ஜாவில் செவ்வாய்க்கிழமை 7 வயது பள்ளி சிறுவன் காருக்குள்ளேயே மரணமடைந்ததை தொடர்ந்து பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று 7 சிறுவனை பள்ளிக்கு அனுப்புவதற்காக அவரது பெற்றோர்கள் தனியார் வாகனத்தை புக் செய்து அனுப்பினார்.

குழந்தைகளை இறக்கி விட்ட பெண் ஓட்டுநர் குழந்தைகள் யாரேனும் காரில் உள்ளனரா என்பதை சோதிக்க மறந்து காரைப் பூட்டிவிட்டு, அவரது கணவனுடன் சென்று விட்டார். ஆனால் காருக்குள் இறங்காமல் அந்த சிறுவன் உள்ளேயே இருந்துள்ளார்.

நேரடியாக காரை நேரடியாக வெயிலில் பார்க் செய்த பெண் ஓட்டுநர் மாலை வந்து பார்த்த பொழுது குழந்தை காருக்குள்ளேயே இறந்து கிடந்தது. தற்பொழுது சார்ஜாவில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுவதால் காருக்குள்ளே வெப்பம் 60 டிகிரி செல்சியஸ் சேர்ந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே உஷ்ணம் தாங்காமல் குழந்தை இறந்திருக்கின்றது. இதனை அடுத்து சார்ஜாவின் பள்ளிக்கல்வித்துறை பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி குழந்தைகளை முடிந்த அளவிற்கு பள்ளி வாகனத்திலேயே பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானது என்று கூறியுள்ளது.

தங்களது செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காகi பாதுகாப்பற்ற தனியார் வாகனங்களில் குழந்தைகளை அனுப்புவது தவறு என்று எச்சரித்துள்ளது. அதையும் மீறி தனியார் வாகனத்தில் அனுப்புகின்றீர்கள் என்றால் முறையாக லைசன்ஸ் வாங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான வாகனங்களில் மட்டுமே குழந்தைகளை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்குகின்றது.

சிறிய செலவினங்களுக்காக குழந்தைகளின் வாழ்க்கையை பனையம் வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தகவல் அளிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனரா என்ற பதிவேட்டை சோதனை செய்யும்படி பெற்றோருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

பள்ளி வாகனங்களில் குழந்தைகளுக்கான எல்லா பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்கப்படுகின்றது .மேலும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதால், பள்ளி பேருந்தே பாதுகாப்பானது என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.