துபாயில் இருந்து இனி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அபுதாபி செல்லலாம்…. மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சையத் விமான நிலையம்!

Abudhabi: துபாயில் வசிக்கும் ஏராளமானோர் பல்வேறு காரணங்களுக்காக அபுதாபிக்கு பயணிக்கின்றனர். குறிப்பாக அவர்களில் அபுதாபி விமான நிலையத்திற்கு செல்வோர் ஏராளம். துபாயில் இருந்து இந்தியாவிற்கு செல்ல விமான டிக்கெட்டுகள் எப்பொழுதும் பிசியாக இருப்பதுண்டு.

இந்தியர்கள் ஏராளமாக வசிக்கும் நகரம் துபாய் என்பதால் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தியாவிற்கு பயணிக்கின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு திடீரென்று டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருந்தால் அல்லது டிக்கெட்டுகளின் விலை அபுதாபியில் இருந்து குறைவாக இருந்தால் அவர்கள் அபுதாபி விமான நிலையத்திற்கு வந்து, பிறகு இந்தியாவிற்கு பயணம் செய்கின்றனர்.

இதற்காகவே ஏராளமானோர் அபுதாபி விமான நிலையத்திற்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் பயணிகள் பெரும்பாலும் தனியார் டாக்ஸிகளை உபயோகிக்கின்றனர். அல்லது பேருந்துகளில் வர வேண்டுமானால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பிறகு விமான நிலையத்திற்கு வர வேண்டும். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அபுதாபி சையத் விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாய்க்கு பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை விமான நிலையத்திலிருந்து பேருந்து சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதற்கு முன்கூட்டியே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்ய அபுதாபி சையத் விமான நிலையத்தின் வெப்சைட்டிற்குள் சென்று ஷட்டில் பேருந்து சேவையை தேர்ந்தெடுத்து ‘புக்’ என்ற ஆப்ஷனை கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் துபாயில் இருந்து விமான நிலையத்திற்கு வருகின்றீர்களா அல்லது சையத் விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு புறப்படுகின்றீர்களா என்ற விவரத்தை தர வேண்டும்.

அதற்கு அடுத்தபடியாக உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்து டெபிட் கார்டு மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். அபுதாபி விமான நிலையத்திலிருந்து தினசரி வழங்கப்படும் இந்த சேவை மூலம் ஆயிரக்கணக்கானோர் மக்கள் பயனடைவார்கள் என விமான நிலையம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.