இந்தியாவில் மட்டும் இல்லைங்க…. அட்சய திருதியைக்கு நகை வாங்க துபாயிலும் படையெடுக்கும் மக்கள் கூட்டம்!

UAE: அட்சய திருதியை என்றால் தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பது நாம் அனைவரும் அறிந்து ஒன்றுதான். ஆனால் மக்கள் தங்கம் வாங்குவதற்காக துபாய் வரை பிளைட் ஏறி சென்று கொண்டாடுகின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? பொதுவாக தமிழ் மாதமான சித்திரை மாதம் வரும் அமாவாசைக்கு பின்பு வருகின்ற வளர்பிறை திருதியை அட்சய திருதியை எனப்படுகின்றது.

அட்சயம் என்றால் மென்மேலும் வளரும் என்று பொருள் படுவதால் இந்த நாட்களில் எது செய்தாலும் பல மடங்கு புண்ணியம் அதிகமாகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இந்த நாளில் நகை மட்டுமல்ல வேறு ஏதேனும் மங்களகரமான பொருட்கள் மற்றும் மற்றவர்களுக்கு புண்ணியம் செய்தாலும் பல மடங்கு பெறுவோம்.

ஆனால் நம் மக்கள் தங்கம் வாங்கினால் மென்மேலும் பெருகும் என்பதை மட்டும் மனதில் கொண்டு இன்று வரை கூட்டம் கூட்டமாக நகைக் கடைக்கு படையெடுத்து செல்கின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் மேலும், வீடுகளில் தங்கம் பல் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் நகை வாங்க இல்லத்தரசிகள் ஆவலுடன் நகை கடைக்கு செல்வதுண்டு. ஆனால், இந்தியாவிலிருந்து டூரிஸ்ட் விசாவில் சென்று துபாய் சென்று தங்கம் வாங்குவதற்கு பல மக்கள் இங்கிருந்து துபாய் புறப்பட்டுள்ளனர் என்ற செய்தி தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகம் அதேநேரம் துபாயில் கிடைக்கும் அளவிற்கு தூய தங்கம் கிடைக்காது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளதால் ஏராளமானோர் டூரிஸ்ட் விசாவில் சென்று தங்கம் வாங்க வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து, துபாயில் கடை வைத்திருக்கும் தங்க வியாபாரி கூறும் பொழுது வழக்கமான நாட்களை விட கடந்த இரண்டு நாட்களில் தங்கத்தின் வியாபாரம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதிலும் இந்தியாவிலிருந்து தங்கம் எடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும், அவர்களிடம் காரணத்தை விசாரித்த பொழுது அட்சய திருதியை நாளில் தங்கம் எடுக்க வேண்டும் என்பதால் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். துபாயில் உள்ள நகைக்கடை வியாபாரிகளும் இந்தியர்களின் கலாச்சாரத்தை எண்ணி பெருமிதம் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.